Wednesday, May 28, 2008

தீபாவளி... தீபாவளிதான்...! -குழந்தைப் பாடல்

தீபாவளி... தீபாவளிதான்
தித்திக்கும் தீபாவளிதான்
புத்தாடை தீபாவளிதான்
வெடி பட்டாசு தீபாவளிதான்...

அதிகாலையிலே எழுந்து
அதிர்வேட்டை போட்டு
அருகிலுள்ளோரை எழுப்பும்
ஆரவார தீபாவளிதான்...

புத்தம் புது ஆடைகளை
மகிழ்வுடன் அணிந்து கொண்டு
உறவுகளோடு வீதிவலம் வருகின்ற
விருப்பமான தீபாவளிதான்...

பூந்தி, லட்டு, ஜிலேபி, முறுக்கு,
வடை, அதிரசம் என அனைத்து
வகை பலகாரங்களையும் சாப்பிட
சுவையான தீபாவளிதான்...

பூத்துச் சிரிக்கும் மத்தாப்பு
வானை மிரட்டும் வானவெடி
சந்தியில் வைக்கும் சரவெடி என
டமால்... டுமீல்... தீபாவளிதான்...

தம்பி பிடிக்க கம்பி மத்தாப்பு
தங்கை வைக்க புஸ்வானம்
அக்கா வைக்கும் லட்சுமி வெடி
என அசர வைக்கும் தீபாவளிதான்...

அத்தனை ரக பட்டாசுகளும்
அழகழகாக வெடிப்பதால்
நம் அனைவரின் மனதிலும்
உற்சாகம் கொடுக்கும் தீபாவளிதான்...

விலங்குகளுக்கும் தொந்தரவின்றி
முதியோர்களுக்கும் தொந்தரவின்றி
நோயாளிகளுக்கும் தொந்தரவின்றி
பட்டாசு வெடித்தால் பட்டான தீபாவளிதான்...

குடிசைகள் இருக்கும் பார்த்துக் கொள்
பெட்ரோல் நிலையங்கள் இருக்கும் பார்த்துக் கொள்
கொளுத்தும் போது கவனம் கொண்டால்
கொண்டாட்டமான தீபாவளிதான்...

-மோ. கணேசன்.
(03.11.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)

0 comments: